அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வின் பெயரை அமெரிக்க அரசின் பயன்பாட்டில் “Lake America” என மாற்றியதற்கு கனடா மற்றும் ஒன்ராறியோ மாகாண அரசுகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
டிரம்பின் நடவடிக்கைக்கு நேரடியாக பதிலளிக்கும் வகையில், ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், Lake Ontario கரையில் பிரமாண்டமான புதிய பெயர்ப்பலகையை திறந்து வைத்துள்ளார்.
“Lake Ontario – Now and Always” என்ற வாசகத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பெயர்ப்பலகை, ஒன்ராறியோவின் Grimsby அருகிலுள்ள Fifty Point Conservation Area பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
“அதிபர் டிரம்ப் இதை என்ன பெயர் வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் கனடாவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் இது எப்போதும் Lake Ontario என்றுதான் அழைக்கப்படும்,” என்ற நிலைப்பாட்டை டக் ஃபோர்ட் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், கனடியர்கள் வலிமையானவர்கள் என்றும், அச்சுறுத்தல்களுக்கோ மிரட்டல்களுக்கோ கனடா ஒருபோதும் பணியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மார்க் கார்னியும் கடும் எதிர்ப்பு
கனடிய பிரதமர் மார்க் கார்னியும் டிரம்பின் பெயர்மாற்ற நடவடிக்கையை முற்றாக நிராகரித்துள்ளார்.
“Ontario” என்ற பெயர் பழங்குடியின Wendat மொழியிலுள்ள “Ontari’io” என்ற சொல்லில் இருந்து உருவானது. அதன் பொருள், “ஏரி அழகானது; ஏரி பெரியது” என்பதாகும்.
இந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது என்றும், கனடா கூட்டமைப்பு உருவாவதற்கும் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கும் முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் மார்க் கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கனடியர்களைப் பொறுத்தவரை அது “அப்போதும், இப்போதும், எப்போதும் Lake Ontario தான்” என்ற உறுதியான நிலைப்பாட்டை அவர் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அரசு வரைபடங்களில் ‘Lake America’
ஆகஸ்ட் 27ஆம் தேதி டிரம்ப் கையெழுத்திட்ட நிறைவேற்று உத்தரவின்படி, அமெரிக்க கூட்டாட்சி அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள், வரைபடங்கள் மற்றும் புவியியல் தரவுத்தளங்களில் Lake Ontario-வுக்கு பதிலாக “Lake America” என்ற பெயரைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த உத்தரவு கனடாவில் ஏரியின் அதிகாரப்பூர்வ பெயரை மாற்றுவதில்லை. சர்வதேச அளவிலும் “Lake Ontario” என்ற பெயரை மாற்றுவதற்கான அதிகாரம் அமெரிக்க அரசுக்கு இல்லை.
இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள Google Maps பயனர்களுக்கு தற்போது “Lake America” என்ற பெயர் காட்டப்பட்டு வருகிறது. கனடாவில் உள்ள பயனர்களுக்கு தொடர்ந்து “Lake Ontario” என்றே காண்பிக்கப்படுகிறது.
டிரம்ப் கடந்த ஆண்டு Gulf of Mexico-வை அமெரிக்க அரசின் பயன்பாட்டில் “Gulf of America” என பெயர்மாற்றம் செய்ததன் தொடர்ச்சியாகவே Lake Ontario தொடர்பான இந்த நடவடிக்கையும் பார்க்கப்படுகிறது.
“மோசமான ஒப்பந்தத்தை விட ஒப்பந்தமே இல்லாதது மேல்”
இந்த பெயர்மாற்ற சர்ச்சைக்கு மத்தியில் கனடா–அமெரிக்கா வர்த்தக பதற்றமும் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்துத் தெரிவித்த டக் ஃபோர்ட், கனடிய தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மோசமான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதை விட, “ஒப்பந்தமே இல்லாமல் இருப்பது மேல்” என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கனடாவின் உருக்கு, அலுமினியம் மற்றும் வாகன உற்பத்தித் துறைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Lake Ontario பெயர்மாற்ற சர்ச்சையும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதலும், கனடா–அமெரிக்க உறவில் மேலும் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.