Reading Time: < 1 minute

கனடாவில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை இந்த மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், புதிய பாராளுமன்றத்தை இம்மாதம் 22 ஆம் திகதி கூட்ட முடியும் என நம்புவதாக ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கனடா பாராளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டியே தோ்தல் நடத்தப்பட்டபோதும் பிரதமர் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் மீண்டும் சிறுபான்மை அரசாங்கம் ஒன்றையே அமைக்க முடிந்துள்ளது.

இந்நிலையில் கனேடிய அரசின் தற்போதைய முன்னுரிமையாக கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் உள்ளது.

அனைத்து உள்நாட்டு விமான மற்றும் ரயில் பயணிகளுக்கும், அனைத்து கூட்டாட்சி ஊழியர்களுக்கும் தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாகவுள்ளது. ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து கனடாவில் 1.68 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 28,400 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

எனினும் தடுப்பூசி வீதங்கள் அதிகரித்துள்ள நிலையில் சமீபத்திய மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொற்று விகிதங்கள் குறைந்துவிட்டன.

இதேவேளை, அனைத்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை உறுதி செய்ய விரும்புவதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதற்காக ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவா் கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னுதாரணமாக இருப்பார்கள் என்று கனேடியர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.

லிபரல் கட்சி, என்.டி.பி. மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் ஆகிய கட்சிகள் தங்கள் எம்.பிக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளன.

எனினும் கட்டாய தடுப்பூசிக் கொள்கைக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான கன்சா்வேடிவ் தலைவர் எரின் ஓ’டூல் கருத்து வெளியிட்டு வருகிறார். கட்டாய தடுப்பூசி திட்டத்துக்குப் பதிலாக கொவிட்19 பரிசோதனைகளை அதிகரிக்கும் திட்டத்தை அவர் வலியுறுத்திறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.