கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோ அடுத்த சில வாரங்களில் கொவிட் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கத் தயாராகி வருகிறது.
முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் உணவகங்கள் அவற்றின் 50 வீத திறனில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பை ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் இன்று வியாழக்கிழமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரங்களின்படி, பெப்ரவரியில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் மற்றும் மார்ச் மாதத்தில் மாகாணத்தை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கான திட்டங்களையும் அரசாங்கம் கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
உணவகங்கள், ஜிம்கள் உள்ளிட்ட சிலவற்றை மீண்டும் திறப்பது குறித்த நேர்முறையான அறிவிப்பை இந்த வாரத்தின் பிற்பகுதியில் ஒன்ராறியர்கள் எதிர்பார்க்கலாம் என நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் டக் போர்ட் கூறினார்.
எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற உறுதியான அறிவிப்பை மாகாண மக்களும், வணிகர்களும் எதிர்பார்ப்பதை நாங்கள் அறிவோம். இந்த வாரத்தின் பிற்பகுதியில் நாங்கள் இது குறித்து தெளிவுபடுத்துவோம் என ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் கூறினார்.
மாகாணத்தின் கொவிட் தொற்று நோய் சில நாட்களுக்குள் உச்சம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ரொரன்டோவில் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என ரொரன்டோ தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலீன் டி வில்லா நேற்று புதன்கிழமை கூறினார்.