Reading Time: < 1 minute

கனடாவின் டர்ஹாம் பகுதியில் திடீரென்று தற்கொலை செய்துகொண்டவர்கள் தொடர்பில் பொலிசார் முக்கிய முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலை தொடர்பிலான எண்ணத்தில் இருக்கும் நபர்களை இலக்கு வைத்து மிசிசாகா பகுதியை சேர்ந்த கென்னத் லா என்பவர் சோடியம் நைட்ரைட் ரசாயனத்தை விற்பனை செய்துள்ளதை தற்போது டர்ஹாம் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

இந்த நிலையில் 2022ல் திடீரென்று தற்கொலை செய்துகொண்டவர்கள், சோடியம் நைட்ரைட் வழக்கில் தொடர்புடையவர்கள் என கருதி, வழக்கை விசாரிக்க டர்ஹாம் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

மட்டுமின்றி, கென்னத் லா விவகாரத்தில் பீல் பிராந்திய பொலிசாருடன் தற்போது டர்ஹாம் பொலிசாரும் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளனர். மேலும், சோடியம் நைட்ரைட் ரசாயனத்தால் மரணமடைந்த நபர்கள் மீதான தற்கொலை வழக்கை இனி கொலை வழக்காகவும் விசாரிக்க முடிவாகியுள்ளது.

57 வயதான கென்னத் லா மே 2ம் திகதி பீல் பிராந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தற்கொலைக்கு உதவுதல் அல்லது தூண்டுதல் என இரு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், சோடியம் நைட்ரைட் ரசாயனதை விற்கும் பல ஒன்லைன் கடைகளுக்குப் பின்னால் கென்னத் லா இயங்குவதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, தற்கொலை செய்துகொள்ள உதவும் அந்த ரசாயனத்தை கென்னத் லா தமது இணைய பக்கமூடாக 40 நாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பீல் பொலிசார் தங்கள் அதிகார வரம்பிற்குள் சோடியம் நைட்ரைட் பயன்பாடு தொடர்புடைய இரண்டு இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளனர்.