Reading Time: < 1 minute

கனடாவுக்கு உயர்கல்வி கற்க புறப்பட்ட இந்திய இளம்பெண் செய்த சிறு தவறு, அவருக்கு ஒரு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பெங்களூருவிலிருந்து உயர்கல்வி கற்பதற்காக கனடா புறப்பட்டுள்ளார், சிம்ரன் (25) என்னும் இளம்பெண்.

வான்கூவரிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றில், கனேடிய மாணவர் விசா பெற்று, ஏப்ரல் மாத இறுதியில் வகுப்புகள் துவங்குவதையொட்டி, கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் இணையதளத்தில் டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளார் சிம்ரன்.

உறவினர்களிடம் விடைபெற்றுக்கொண்டு விமான நிலையம் சென்று, விமானம் ஏறப்போகும் நேரத்தில், அவரிடம் அமெரிக்கா விசா இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட விமான ஊழியர்கள், சிம்ரனை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை.

பெரும் இழப்பு 77,000 ரூபாய் மதிப்புடைய டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார் சிம்ரன்.

பின்னர், மீண்டும் 1.4 இலட்ச ரூபாய் செலவு செய்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றின் மூலம் கனடா சென்றுள்ளார் அவர்.

விடயம் என்னவென்றால், அமெரிக்கா வழியாக, அதாவது இந்தியாவிலிருந்து கத்தாரிலுள்ள தோஹா சென்று, தோஹாவிலிருந்து அமெரிக்காவிலுள்ள சியாட்டில் நகரத்துக்கு மற்றொரு இணைப்பு விமானத்தில் சென்று, சியாட்டிலிலிருந்து வான்கூவரை அடையும் வகையில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார் சிம்ரன்.

ஆனால், இப்படி அமெரிக்கா வழியாக செல்லவேண்டுமானால், அதற்கான அமெரிக்க விசா ஒன்று (transit visa) தேவை என்பது நீண்ட காலமாக அமுலில் இருக்கும் விதி.

இந்த விதி சிம்ரனுக்குத் தெரியாததால்தான் இவ்வளவு பிரச்சினையும்!

இது அமெரிக்கா வழியாக கனடா செல்லும் புதியவர்களுக்கு ஒரு பாடம்… ஆனால், பிரித்தானியா வழியாக கனடா செல்வதற்கு, பிரித்தானிய விசா (transit visa) தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.