Reading Time: < 1 minute

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் சிறார்கள் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதை அடுத்து, ஒன்ராறியோ குழந்தைகள் மருத்துவமனை ஒன்று இரண்டாவது தீவிர சிகிச்சைப் பிரிவைத் திறந்துள்ளது.

ஒட்டாவாவில் அமைந்துள்ள கிழக்கு ஒன்ராறியோவின் குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில், உச்ச வைரஸ் சீசன் சீக்கிரமாகவே ஆரம்பமாகிவிட்டது, அதன் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நெருக்கடி நிலையை சமாளிக்க மாகாண நிதியுதவி உதவியாக இருந்தது என தெரிவித்துள்ளனர். சாதாரணமாக காணப்படும் எண்ணிக்கையை விடவும் இரண்டு மடங்கு சிறார்கள் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனை உதவியை நாடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது இரண்டாவது தீவிர சிகிச்சைப் பிரிவைத் திறந்துள்ளதால், அதில் ஐந்து படுக்கைகளுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் உரிய ஊழியர்களையும் பொறுப்புக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நிலைக்கு ஏற்ப புதிதாக ஆட்களை பணிக்கு அமர்த்தவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, ஒட்டாவா பகுதி மக்கள் உள் அரங்கிலும் மாஸ்க் அணிந்துகொண்டு வைரல் நோயை கட்டுக்குள் கொண்டுவர உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.