Reading Time: < 1 minute

துருக்கிப் படைகளினால் வடக்கு சிரியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டிற்கான ராணுவ உபகரணங்கள் தொடர்பான ‘புதிய ஏற்றுமதி அனுமதிகளை’ தற்காலிகமாக ரத்துச் செய்வதாக கனடா அறிவித்துள்ளது.

சிரியாவுக்குள் துருக்கியின் படை நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டின் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருதலைப்பட்ச போர் நடவடிக்கை ஏற்கனவே பலவீனமாக உள்ள பிராந்தியத்தை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன் மனிதாபிமான நிலைமையையும் மோசமாக்குகிறது.

கனடா வௌியுறவு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட பட்டியலின்படி, தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்ட ஏற்றுமதி அனுமதிகள் ‘கட்டுப்படுத்தப்பட்ட சொத்துக்கள்’ அடிப்படையில் ராணுவ உபகரணங்களை உள்ளடக்கியுள்ளது.

சிரியாவில் ஊடுருவிய துருக்கி படைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பல ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்த இதேபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றும் வகையில் கனடாவின் இந்த அதிரடித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விவகாரங்களின்படி, துருக்கிக்கான கனடாவின் ஆயுத விற்பனை 2018 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 87 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.