கனடாவின் ஒன்ராறியோவை சேர்ந்த பெண்மணி ஒருவர் காதலனால் ஏமாற்றப்பட்டு வெளிநாட்டு சிறையில் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஒன்ராறியோவின் Barrie பகுதியை சேர்ந்தவர் 64 வயதான Suzana Thayer. இவர் ஹொங்ஹொங் விமான நிலையத்தில் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
6 பேரப்பிள்ளைகளை பார்த்த Suzana Thayer தமது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இணையத்தில் காதலை தேடியுள்ளார். இந்த நிலையில் இவருடன் நட்பாக பழகியுள்ளார் ஒருவர். அந்த நபரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய Suzana Thayer சில மாதங்களிலேயே காதல் வசப்பட்டார்.
ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், இவரிடம் இருந்து ஆயிரக்கணக்கான டொலர்களை கறந்தார். இறுதியில், அந்த நபர் தமது இணைய நடவடிக்கைகள் அனைத்தையும் அழித்துவிட்டு, மாயமானார்.
நொறுங்கிப் போன Suzana Thayer இந்த இழப்பில் இருந்து மெதுவாக மீண்டு வந்த நிலையில், மீண்டும் ஒருவரின் நட்பு வலையத்தில் சிக்கினார். ஆனால் இரு நபர்களும் ஒருவர் என்றே Suzana Thayer-ன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் நம்புகின்றனர்.
இந்த முறை அந்த நபருக்கு வேறு திட்டம் இருந்தது. எத்தியோப்பாவிற்கு வந்தால் சந்திக்கலாம் என மீண்டும் ஆசையை காட்டியுள்ளார். இவரும் அந்த நபரின் பேச்சை நம்பி, பயண ஏற்பாடுகளை அவரே செய்துள்ளதாலும் எத்தியோப்பியா புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆனால் அங்கேயும் அவர் இவரை சந்திக்க வரவில்லை, மாறாக நண்பர்கள் சிலரின் பரிசு பொதிகள் மற்றும் அவர்கள் அளித்த பெட்டியுடன் ஹொங்ஹொங் புறப்பட்டு செல்ல அந்த நபர் ஏற்பாடு செய்துள்ளார்.
இவரும் ஹொங்ஹொங் விமான நிலையம் சென்றிறங்கிய நிலையில், எத்தியோப்பாவில் கையளிக்கப்பட்ட பரிசு பொதிகளில் போதை மருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது தாம் ஒரு சர்வதேச குற்றச்செயல் குழுவினரிடம் சிக்கியுள்ளதை நிரூபித்தால் மட்டுமே இந்த வழக்கில் இருந்து Suzana Thayer தப்பமுடியும் என்றே கூறுகின்றனர்.
மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு Suzana Thayer வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு கொண்டுச்செல்லப்படும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. அத்துடன், மாதம் ஒருமுறை 10 நிமிடங்கள் மட்டும் தொலைபேசி உரையாடலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.