கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பாக ஆராயும் நிபுணர்கள் குழுவை உள்நுழைய சீனா அனுமதிக்காதது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பத்தினை கண்டறிவதற்கான ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் தகுதிவாய்ந்த 10 நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவ ஆரம்பித்த சீனாவின் வுஹான் நகருக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.
எனினும், இதுவரை சர்வதேச நிபுணர்கள் குழு உள்நுழைவதற்கான அடிப்படை அனுமதிகள் எதனையும் சீனா வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ட்ருடோ இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தேவையான பொறுப்புக்கூறலுக்கும், இந்த கொடூரமான, பயங்கரமான சூழ்நிலையிலும் உலகம் எவ்வாறு மூழ்கியது என்பதைப் புரிந்து கொள்வதற்கும், வைரசின் தோற்றம் அறியப்பட வேண்டிய நிலையில் சீனா இதில் வகிக்க வேண்டிய பங்கை நிச்சயமாகப் புரிந்து கொள்வதற்கும் நிச்சயமாக ஒரு நேரம் இருக்கப்போகிறது’ என கூறினார்.