கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவதை மெதுவாக்க, நகரம் எடுக்கக்கூடிய குறிப்பிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் கவனித்து வருவதாக ரொறன்ரோ மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்;.
நேற்று (புதன்கிழமை) சிட்டி ஹோல் செய்தி மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அதிகாரிகள் நான்கு நடவடிக்கைக்கான பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த பகுதிகள் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாகத் தோன்றும் இடங்கள் என்பதால் அவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.
உயிரைக் காப்பாற்றுவதற்கும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், நமது பொருளாதாரத்தைத் திறந்து வைப்பதற்கும் ஒரு நகர அரசாங்கமாக எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். இந்த இலக்குகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் அடைய முடியுமென்றால் நாங்கள் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்’ என கூறினார்.
பரிசீலனையில் உள்ள செயல்களில் பின்வருவன அடங்கும்:
இரவு நேர மதுபானசாலைகள் மற்றும் உணவகங்களுக்கு முந்தைய இறுதி நேரங்களை செயற்படுத்துதல்.
பணியாளர்கள் அதிக நேரம் பணியிடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.
திருமண இடங்கள் மற்றும் விருந்து அரங்குகளில் விருந்தினர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க மாகாணத்தை வலியுறுத்துதல்.
பல கொவிட்-19 தொற்றுகள் உள்ள பகுதிகளில் பாப்-அப் சோதனைக்கு நகர சொத்துக்களை பயன்படுத்த அனுமதிக்கிறது.