அல்பர்ட்டாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில், எத்தனை பேர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர் ஆகிய தகவல்கள் உடனடியாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக முழுமையான விபரம் வெளியாகியுள்ளது.
அல்பர்ட்டாவின் ஜாஸ்பர் அருகே கொலம்பியா ஐஸ்ஃபீல்ட்ஸ் என்ற இடத்தில், நேற்று முன் தினம் (சனிக்கிழமை) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிரிழந்ததோடு, 14 பேர் உயிருக்கு ஆபத்தான காயம் அடைந்தனர். பேருந்து விபத்துக்குள்ளானபோது 27 பேர் இருந்துள்ளனர்.
24 பேர் எட்மண்டன், கிராண்டே ப்ரைரி, கல்கரி மற்றும் பான்ஃப் ஆகிய மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அல்பர்ட்டா சுகாதார சேவைகள் தெரிவித்துள்ளது. அல்பர்ட்டா சுகாதார சேவைகளின் அறிக்கையின்படி, ஐந்து பேர் மோசமான நிலையில் உள்ளனர்.
எட்மண்டன் மற்றும் கல்கரி இரண்டிலும் உள்ள மருத்துவமனைகள் செம்மஞ்சள் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே அவை அதிக எண்ணிக்கையிலானோருக்கு மற்றும் கடுமையான காயங்களுடையவர்களுக்கு தயாராக இருக்கும் என்று அல்பர்ட்டா சுகாதார சேவைகள் கூறியுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களின் நிலைமைகள் அல்லது அடையாளங்கள் குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எதுவும் தெரிவிக்கப்படவில்லை. உயிரிழந்த மூன்று பேர் பெரியவர்கள் என்று பொலிஸார் கூறினர்.
இதேவேளை, விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பூங்கா நிர்வாகம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.