இவ்வருடம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற இருந்தது. ஆனால், தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், கொரோனா அச்சம் காரணமாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு ஒலிம்பிக் கமிட்டிகள் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டால் எங்கள் நாட்டு வீரர், வீராங்கனைகளை அனுப்பமாட்டோம் என கனடா, ஆஸ்திரேலிய நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தன.
இந்நிலையில், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியை அடுத்த ஆண்டு ஒத்திவைப்பது தொடர்பாக 4 வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது.அதேபோல, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும் போது, ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யும் எண்ணம் எப்போதும் இல்லை. கொரோனா அச்சுறுத்தலால் வீரர், வீராங்கனைகளின் உடல்நலன் கருதி ஒத்திவைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதற்க்கு அமைய கொரோனா வைரஸ் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான டிக் பௌண்ட் தெரிவித்துள்ளார்.