Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராட இராணுவத்தை பயன்படுத்த இதுவரை திட்டமிடவில்லை, ஆனால் இதுவும் தங்கள் திட்டத்தில் இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கனடாவில் 10 மாகாணங்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கனடாவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை 5,655 ஆக இருந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று  6,280 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 இல் இருந்து 63 ஆக அதிகரித்துள்ளது.

8.5 மில்லியன் மக்கள் வசிக்கும் கியூபெக்கில் அனைத்து வீதிகளும் முடக்கப்பட்டுள்ளதுடன் நகருக்குள் வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே கியூபெக் அல்லது பிற மாகாணங்களுக்கு உதவ இராணுவத்தை களமிறக்குவது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ட்ரூடோ, “அனைத்து வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இராணுவத்தின் உதவி தேவைப்படும்போது அவர்கள் உதவ தயாராக இருக்கிறார்கள்.

தற்போது இதைப் பற்றி யாரும் குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைக்கவில்லை, கனடாவில் இராணுவத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை” என கூறினார்.