Reading Time: < 1 minute

கைதிகளைப் பரிமாறிக் கொள்ளும் சீனாவின் திட்டத்தைக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிராகரித்துள்ளார்.

இதன்மூலம், கசப்பான குற்றச்சாட்டுகள் கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் கடுமையான உறவுகளை புதிய தாழ்விற்கு தள்ளியுள்ளன.

அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோவை (Meng Wanzhou) கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கனடா-வன்கூவர் பொலிஸார், கைது செய்தனர்.

இதற்கு அமைய பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் இராஜதந்திரி மைக்கேல் கோவ்ரிக் மற்றும் தொழிலதிபர் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோர் டிசம்பர் 2018ஆம் ஆண்டு முதல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும், இது சீனாவின் பழிவாங்கல் எண்ணமே என கனடா கூற, இதனை சீனா தொடர்ந்து மறுத்துவந்தது. தற்போது இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டுமானால், மெங் வான்ஸோவை விடுவிக்க வேண்டும் எனச் சீன அரசு கோரியுள்ளது.

ஆனால், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் இந்தத் திட்டத்தை ஏற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துவிட்டார்.

இதையடுத்துக் குற்றவாளிகளை நாடு கடத்த ஹொங்கொங்குடன் செய்திருந்த உடன்பாட்டையும் ரத்து செய்துவிட்டார். இதேபோல் ஹொங்கொங்குக்கு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளார்.

ஹொங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து முக்கிய பொருட்களும் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கானவை என்றும் கனடா கருதுகிறது.

கனேடிய வெளியுறவு அமைச்சர் புதிய சட்டத்தை சுதந்திரத்திற்கான ‘ஒரு குறிப்பிடத்தக்க படி’ என்று குறிப்பிட்டார்.

ஆனால், இது சீனாவை கோபப்படுத்தியுள்ளது. சீனா, ஹொங்கொங் பாதுகாப்புச் சட்டத்தை விமர்சித்ததற்காக கனடாவைக் கண்டித்தது. அதே நேரத்தில் ஒப்படைப்பு ஒப்பந்தத்தை கனடா நிறுத்தியதில் ஹொங்கொங் அதிகாரிகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.