Reading Time: < 1 minute

உலகில் இதுவரை 11 நாடுகளில் சுமார் 80 பேர் குரங்கு அம்மை (monkeypox) நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் 50 சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இதுவரை இத்தாலி, சுவிடன், ஸ்பெயின், போர்த்துக்கல், அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது ஒரு அரிதான வைரஸ் தொற்று நோயாகும். பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பொதுவாக லேசான நோயறிகுறிகளே தென்படும். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சில வாரங்களில் குணமடைவார்கள் என்று இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் மக்களிடையே எளிதில் பரவாது என்பதால் அதிகளவானவர்களுக்கு ஏற்படும் ஆபத்து மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே குரங்கு அம்மை நோய்க்கன தடுப்பூசி எதுவும் இதுவரை இல்லை. ஆனால் பெரியம்மை நோய்க்கு வழங்கப்படும் தடுப்பூசி 85% பாதுகாப்பை வழங்குகிறது. ஏனெனில் இரண்டு வைரஸ்களும் பெரும்பாலும் ஒத்தவை என சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதுவரை 11 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான செயற்றிட்டங்களை உலக நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா பிராந்திய பணிப்பாளர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்தார்.

இதேவேளை, குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரைத் தவிர ஏனையவர்கள் யாரும் வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ளாதவர்கள் எனவும் அவா் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் முதல் குரங்கு அம்மை நோயாளி மே 7 அன்று உறுப்படுத்தப்பட்டார். அவர் சமீபத்தில் நைஜீரியாவுக்குச் சென்றிருந்தார் என இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.