Reading Time: < 1 minute

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலையின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்தவர்களையும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைவுகூர்ந்தார்.

ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட மிலேச்ச தனமான கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கனேடிய பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கறுப்பு ஜூலை என்பது நாட்டில் பல தசாப்தங்களாக அமைதியின்மை மற்றும் அதிகரித்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை கலவரங்கள் மற்றும் கொடூரமான அழிவுகளின் ஒரு வாரமாகும்.

இதுவே 30 ஆண்டுகளாக நீடித்த ஒரு மோதலுக்கு வழிவகுத்தது, மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது மற்றும் இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களில் நீடித்த காயங்களை விட்டுச் சென்றது.

1983 இல் 1,800 க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை கனடா அரசு செயல்படுத்தியது. தமிழ்-கனடியர்கள் ஒவ்வொரு நாளும் கனடாவுக்கு அளிக்கும் மகத்தான மிகப்பெரிய பங்களிப்புகளை காண்கிறோம்.

கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்த குடும்பம், நண்பர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாட்டில் அர்த்தமுள்ள நீதி, பொறுப்புக்கூறல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி செயற்பாடுகளுக்கு கனடா தனது முழு ஆதரவையும் தொடர்ந்தும் வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

Statement by the Prime Minister on the anniversary of Black July

https://pm.gc.ca/en/news/statements/2019/07/23/statement-prime-minister-anniversary-black-july