கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போலியானர் என்றும், மோசடிகாரர் என்றும் பிரதமர் பதவிக்கான போட்டிக்களத்தில் உள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அன்ரூவ் ஸ்கீர் (Andrew Scheer) குற்றம்சுமத்தியுள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலில் இரண்டாவது தடவையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தீர்மானித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டாவது விவாதத்தின் போது பிரதமர் ட்ரூடோவை, அன்ரூவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதேவேளை, ட்ரூடோவின் கருப்பு முகம் தொடர்பான விவகாரத்தையும் கையில் எடுத்துள்ள அன்ரூவ் ஸ்கீர், “நீங்கள் போலியானவர் மற்றும் மோசடி மன்னன், நீங்கள் நாட்டை நிர்வகிக்க தகுதியற்றவர்” என்று ட்ரூடோவை சாடியுள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு தனது 29 ஆவது வயதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அரேபியன் நைட்ஸ் விருந்துபசாரத்தில் முகம், கழுத்து மற்றும் கைகள் என கருப்பு நிறத்தில் அலங்காரம் செய்திருந்த ஔிப்படத்தை கடந்த மாதம் ரைம்ஸ் நாளிதழ் வௌியிட்டிருந்தது.
இந்த விடயத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்கட்சியினர், பிரதமர் மீது அவதூறான கருத்துக்களை வௌியிட்டு வருகின்றனர்.
அதேவேளை, ட்ரூடோ உயர்கல்வி கற்கும் போது விழாவொன்றில் விநோதவுடை அணிந்திருந்த காணொளியொன்றும் வௌியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.