கனேடிய நாடாளுமன்றம் அருகே சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களுடன் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில், தொடர்புடைய தகவல் வதந்தி என தெரிய வந்துள்ளது.
சனிக்கிழமை மதியத்திற்கு மேல் திடீரென்று நாடாளுமன்ற வளாகத்தில் பொலிசார் குவிந்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களை அவசர அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களுடன் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பொலிசார் இரண்டு வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இருவரை பொலிசார் கைதும் செய்துள்ளனர்.
இதனையடுத்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகள், ஒட்டாவா காவல்துறை, உளவுத்துறை உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு குழுக்கள் இந்த விசாரணையில் பங்கேற்றுள்ளனர்.
கனேடிய எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் இருந்தே, வெடிகுண்டு வாகனம் தொடர்பில் தகவல் கசிந்துள்ளதாகவும், இதனையடுத்தே விசாரணை முடுக்கிவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட முதல் வாகனம் பகல் 2.53 மணிக்கு அச்சுறுத்தல் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இரண்டாவது வாகனமானது பகல் 3.33 மணிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இரு வாகனங்களிலும் விசாரணைக்கு உதவும் வகையில் ஆதாரங்கள் சிக்கியுள்ளதா என்பது தொடர்பில் எவ்வித தகவலும் பொலிஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை.
மேலும், விசாரணைக்கு பின்னர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏதுமில்லை என்றே பொலிஸ் தரப்பு உறுதி அளித்துள்ல்ளது.