கனடா கூட்டாட்சித் தேர்தல் செப்டம்பர் 20-ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் அதிக வாக்காளர்களைக் கொண்ட ரொரண்டோ பெரும்பாகபகுதியில் (Greater Toronto Area – GTA) வெற்றி பெற லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பு முடிவு ரொரண்டோ பெரும்பாகம் பகுதியில் 36 வீதம் பேர் பிரதமர் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றும் 35 வீதம் பேர் கன்சர்வேடிவ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றும் கூறுகிறது.
அத்துடன் ரொரண்டோ பெரும்பாகத்தில் 17 வீதம் பேர் என்.டி.பிக்கு வாக்களிப்பார்கள். ஆறு வீதம் பேர் கனடா மக்கள் கட்சிக்கு வாக்களிப்பார்கள் மற்றும் வெறும் மூன்று வீதம் பேர் பசுமை கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றும் இந்த கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது.
ரொரண்டோ பெரும்பாக பகுதியில் உள்ள 503 வாக்காளர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததன் மூலம் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆளுநர் நாயகம் மேரி சைமனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து உடனடியாகவே தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்சிகள் தங்கள் நிலைப்பாடுகளை அறிவித்து வாக்காளர்களைக் கவர 36 நாட்கள் உள்ளன.
இந்நிலையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட ரொரண்டோ பெரும்பாகம் பகுதி தோ்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய போர்க்களமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
கடைசியாக இடம்பெற்ற 2019 கூட்டாட்சி தேர்தலில் லிபரல் கட்சியினர் விட்ட்பி முதல் ஹாமில்டன் வரை கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் வென்றனர்.
ரொரண்டோ பெரும்பாகத்தில் வெற்றிபெறுவது கட்சிகளுக்கு முக்கியமானது. தோ்தல் முடிவுகளை தீர்மானிக்கும் இடமாக ரொரண்டோ பெரும்பாகம் உள்ளது. அத்துடன், அடுத்த பிரதமர் யார்? என்பதையும் இங்கு பெறும் வெற்றியே தீர்மானிக்கும் என அரசியல் விமர்சகர் ஜிம் வாரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கயமான இடமாக கியூபெக் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, லிபரல் கட்சியின் கோட்டையாக உள்ள ரொரண்டோ பெரும்பாகம் அவர்கள் முன்னர் வென்ற சில இடங்களை இம்முறை கைப்பற்ற என்.டி.பி. தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் ஜிம் வாரன் கூறினார்.
என்.டி.பி. தலைவர் ஜக்மீத் சிங் ரொராண்டோ நகர்ப்புறங்களில் அதிக கவனம் செலுத்துகிறார். இளைய வாக்காளர்களை கவர்வதன் மூலம் லிபரல் கட்சியிடம் இருந்த இடங்களை கைப்பற்ற அவர் திட்டமிட்டு காய்நகர்த்துகிறார்.
அதேநேரம் லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியினரும் ரொரண்டோ பெரும்பாகம் பகுதிகளில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்பதால் இந்தப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் கடும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.