Reading Time: < 1 minute

கனடாவின் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மேரி நக் (mary ng) பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

அமைச்சருக்கான நெறி முறைகளை மீறி தனிப்பட்ட நண்பருக்கு சார்பாக செயற்பட்டமைக்காக அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

நண்பரின் நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அமைச்சர் மேரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஊடக மற்றும் தொடர்பாடல் பயிற்சி வழங்குதல் தொடர்பிலான ஒப்பந்தம் நண்பரான அமென்டா அல்வாரோவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மற்றும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதங்களில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நண்பர் ஒருவரின் நிறுவனத்திற்கு இவ்வாறு ஒப்பந்தம் வழங்கப்படுவதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை மேரி புரிந்துகொள்ளத் தவறியுள்ளார் என கனடாவின் கருத்து முரண்பாடு மற்றும் நெறிமுறைகள் ஆணையாளர் மாரியோ டியோன் தெரிவித்துள்ளார்.

“எனது நடவடிக்கைகளுக்கான பூரண பொறுப்பினையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன், இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்க கூடாது அதற்காக மன்னிப்பு கோருகின்றேன்” என அமைச்சர் மேரி தெரிவித்துள்ளார்.