கனேடிய எல்லையில் 3 நாட்களில் பெருமளவான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி சர்ரே மற்றும் பிளேனை இணைக்கும் பீஸ் ஆர்ச் பார்டர் கிராசிங்கில் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த லொறியில் இருந்து ஏறக்குறைய 60 கிலோகிராம் கோகோயின் வைத்திருந்த ஐந்து துணிக்கோணிப் பைகள் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கோகோயின் 3 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பு கொண்டது எனவும், இதன்போது கனேடிய குடிமகனான லொறி சாரதி கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தனர்.
இதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான மற்றொரு எல்லைக் கடலில் அமெரிக்கக் கடலுக்குள் நுழைந்த படகில் துணிக்கோணிப் பைகளில் சட்டவிரோதப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு முகமையால் கனேடிய எல்லையில் இருந்து படகைக் கண்காணிக்க முடிந்தது. அது சீக்விமில் உள்ள ஒரு மெரினாவுக்குச் சென்றது. இந்த படகு சுமார் 225 கிலோகிராம் கஞ்சாவுடன் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு தெரிவித்துள்ளது.