கனடா- ஒன்ராறியோ மாகாணம், ரொரண்டோ நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு சமீபமாக துப்பாக்கி ஏந்தியவாறு நடமாடிய இளைஞன் ஒருவரை ரொரண்டோ பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
கனடா நேரப்படி வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த பாடசாலைகள் அச்சம் காரணமாக உடனடியாக மூடப்பட்டன.
பாடசாலைக்கு முன்பாக துப்பாக்கியுடன் நடமாடிய நபரை பொலிஸார் எதிர்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் என ரொரண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி ஜேம்ஸ் ரமெர் தெரிவித்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவா், விசாரணைகள் இடம்பெற்று வருவதால் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை உடனடியாக வழங்க மறுத்துவிட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேகநபர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும் ரொரண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்தார்.
வில்லியம் ஜி டேவிஸ் சிறுவர் பள்ளியில் இருந்து சுமார் 130 மீற்றர் தூரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
அமெரிக்கா – தெற்கு டெக்சாஸில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை புகுந்த ஆயுததாரி ஒருவர் 19பாடசாலை சிறுவர்கள், ஆசிரியர் உள்ளிட்ட 21பேரை கொடூரமாக சுட்டுக் கொன்றார்.
இந்தச் சம்பவம் உலகெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இது உலகெங்கும் துப்பாக்கி வன்முறைக் கலாச்சாரம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் ரொரண்டோவில் பாடசாலை ஒன்றுக்கு மிக அருகில் துப்பாக்கியுடன் நடமாடிய நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நடந்த கொடூர சம்பத்துடன் ஒப்பிட்டால் பெற்றோர்களுக்கு இது இது எவ்வளவு அதிர்ச்சிகரமானதாக இருந்திருக்கும்? என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது என ரொரண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி ஜேம்ஸ் ரமெர் தெரிவித்தார்.
எனினும் ஆயுததாரி, அவரது நோக்கம், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பன தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் இதனை அமெரிக்காவில் நடந்த சம்பவத்தை போன்றது என ஊகிக்கவும், பரிந்துரைக்கவும் நான் விரும்பவில்லை என்றும் ஜேம்ஸ் ரமெர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை டெக்சாஸ் பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு உட்பட அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 200- க்கு மேற்பட்ட தனிநபர் துப்பாக்கிச் சூட்டு வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, கனடாவில் துப்பாக்கிச் சூட்டு வன்முறைகளால் இடம்பெற்ற படுகொலைகள் வீதம் கடந்த 2021 ஆம் ஆண்டில் 100,000 பேருக்கு 0.5 ஆக பதிவாகியுள்ளது என வொஷிங்டன் பல்கலைக்கழக மதீப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதுவே அமெரிக்காவில் இதே ஆண்டில் 100,000 பேருக்கு 4.12 என்ற மிக உயர்ந்த அளவில் படுகொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.