கனடாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2022 – 23 கல்வியாண்டில், சுமார் 28 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல கனடாவிலிருந்தும் இந்தியர்கள், குறிப்பாக, இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
கனடாவைப் பொருத்தவரை, போலி கடிதங்கள் கொடுத்து கல்வி நிறுவனங்களில் சேர்ந்ததே இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படுவதற்கு முக்கிய காரணம் என இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரான V.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள நேர்மையற்ற ஏஜண்டுகள்தான் இந்த மாணவர்களை போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள் என்று கூறிய முரளிதரன், இந்த ஏஜண்டுகளைக் கண்டறிந்து வழக்குத் தொடர பஞ்சாப் அரசுடன் இணைந்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் கனடாவில் தங்குவதற்கு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்குமாறும், அவர்களை நியாயமாகவும், மனிதாபிமான முறையிலும் நடத்துவதை உறுதி செய்ய கனேடிய அதிகாரிகளை இந்திய அரசு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த மாணவர்கள் தவறு செய்யவில்லை என்பதால் அவர்களை நியாயமாகவும், மனிதாபிமான முறையிலும் நடத்த இந்தியா வலியுறுத்தியதாகவும், அதன் விளைவாக, பாதிக்கப்பட்ட சில இந்திய குடிமக்கள் தங்கள் நாடுகடத்தல் அறிவிப்புகள் அல்லது தற்காலிக குடியிருப்பு அனுமதி விசாக்கள் மீது தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் முரளிதரன் கூறினார்.