கனடா மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற துணை ஆளுநர் லின் பேட்டர்சனுக்குப் (Lynn Patterson) பதிலாக, நிதிச் சந்தைத் துறையின் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய டோனி கிராவெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட்டி வீத தீர்மானங்களை மேற்கொள்ளும் நிர்வாக குழுவில் கிராவெல் இணைந்து வங்கியின் நிதி அமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கான பொறுப்பை துணை ஆளுநர் போல் பியூட்ரியுடன் பகிர்ந்து கொள்வார் என்று கனடா மத்திய வங்கி கடந்த வாரம் வௌியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது பதவிகாலம் எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திக்குறிப்பின் படி, 1996 இல் வங்கியில் சேர்ந்த டோனி கிராவெல், மத்திய வங்கியின் நிதிச் சந்தை நடவடிக்கைகளை நிறைவேற்ற வழிவகுத்ததோடு, நிதி ஸ்திரத்தன்மைத் துறையின் துணை நிர்வாக இயக்குநராகவும், 2002 முதல் 2005 வரை சர்வதேச நாணய நிதியத்தில் பொருளாதார வல்லுனராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
அவர் எந்த தருணத்திலும் நிறுவனத்தில் நன்கு மதிக்கப்படுபவர் என்ற கனடாவின் TD பங்குச் சந்தை மூலோபாய தலைவர் அன்ரூ கெல்வின் தெரிவித்துள்ளார்.
“லின் பேட்டர்சன் மேற்கொண்ட பே ஸ்ட்ரீட் அனுபவத்தை கிராவெல் கொண்டு வரவில்லை. ஆனால் கனடா வங்கியினர் இந்த துறையில் மிக விரிவான தொடர்புகளை கொண்டுள்ள ஒரு புதிய சிறப்பு ஆலோசகரை நியமித்துள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 6 ஆம் திகதி தொடங்கம் இரண்டு ஆண்டு காலத்திற்கு ஆளுநரின் சிறப்பு ஆலோசகராக, மூலதனச் சந்தைகளின் மூத்த அதிகாரியான மார்க் ஹார்டிஸ்டி (Mark Hardisty) வங்கியில் இணையப்போவதாகவும் கனடா வங்கி கடந்த வாரம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பே ஸ்ட்ரீட் என்பது ரொறெண்ரோவின் நிதி மாவட்டத்தின் மையமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.