Reading Time: < 1 minute

கனடாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய எஸ்.என்.சி. லவாலின் என்ற கட்டுமான துறை நிறுவனத்திற்கு சார்பான நிலைப்பாட்டை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக எஸ்.என்.சி லவாலின் நிறுவனம் திகழ்கின்றது.

இந்த நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கனடா மக்கள் பணிபுரிந்து வருகிறார்கள். எஸ்.என்.சி. லவாலின் நிறுவனம் லிபியாவில் ஒரு கட்டுமான ஒப்பந்தத்தைப் பெற அந்த நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கனடா ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எஸ்.என்.சி. லவாலின் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதாகவும், அந்த நிறுவனத்துக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை தடுக்க முயற்சிப்பதாகவும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், எஸ்.என்.சி. லவாலின் விவகாரத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சட்டத்தை மீறினார் என அந்த நாட்டின் நெறிமுறைகள் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த குழுவின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.என்.சி. லவாலின் நிறுவனத்துக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை நிறுத்தும்படி முன்னாள் சட்டமா அதிபருக்கு, கனடா பிரதமர் அழுத்தம் கொடுத்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெறிமுறைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கையை தான் ஏற்றுக்கொள்வதாகவும், அதேசமயம் அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும், பிரதமருக்கு எதிரான இந்த கருத்து ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.