இலங்கையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கத்தார் வழியாக கனடா செல்ல முற்பட்ட வேளையில், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான வர்த்தகர் என்பது தெரிய வந்துள்ளது. கத்தார் நாட்டின் டோஹாவிற்கு செல்லவிருந்த QR 669 ரக விமானத்தில் பயணிப்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் விமான கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக கத்தார் விமான சேவை பிரிவிற்கு வருகைத்தந்துள்ளார். இதன் போது அவர் முன்வைத்த கனடா விசா தொடர்பில் ஏற்பட்ட சிக்கலுக்கு அமைய அந்த விமான சேவை அதிகாரி உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விசா பத்திரத்தில் போலித் தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரிடம் விசாரித்த போது தான் இரண்டு லட்சம் ரூபாய் பணம் வழங்கி இந்த கனடா விசாவை தயாரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.