எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னிடம் ரூ. 21 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக கனடா நாட்டைச் சேர்ந்த பிரம்மானந்தம் சுப்பிரமணியன் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக எஸ்.ஏ. சந்திரசேகரின் ‘கிரீன் சிக்னல்’ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மீது, ரூ. 21 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, கனடா நாட்டைச் சேர்ந்த பிரம்மானந்தம் சுப்பிரமணியன் சார்பாக மணிமாறன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்து, எஸ்.ஏ. சந்திரசேகரின் ‘கிரீன் சிக்னல்’ நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “2018ஆம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகரின் தயாரிப்பில் ‘டிராபிக் ராமசாமி’ படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தை கனடா நாட்டைச் சேர்ந்த பிரமானந்த் சுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார். இதற்காக ரூ.20 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தமும் போட்டிருந்தார். ஆனால், ஒப்பந்தப்படி அடுத்த கட்ட பணத்தை பிரமானந்த் சுப்பிரமணியத்தால் தர முடியவில்லை.
பட வெளியீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு படம் வேண்டாம் என்று சொன்னார். அதனால் வியாபாரம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முடியாமல் தவறினோம். அப்போதெல்லாம் படம் வெளியிடும் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கமே முடிவு செய்வதாக பட வெளியீட்டை தள்ளி வைக்கவும் முடியாத நிலை. இந்நிலையில் படம் வேறு விநியோகஸ்தர்களுக்கு விற்கப்பட்டால் பணத்தை தந்துவிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடைசி நேரமாக இருந்தமையால் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால், எஸ்.ஏ.சந்திரசேகரே தமிழகமெங்கும் வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால், கோடிக்கணகான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார். ஆனால், இந்தப் படத்துடன் எந்த தொடர்புமே இல்லாத மணிமாறன் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் பணத்தை ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் புகழை கெடுக்கவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவும் திட்டமிட்டு செயலாற்றியிருக்கின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.