கனடா அமெரிக்க எல்லையில் நால்வர் கொண்ட இந்திய குடும்பம் பனியில் உறைந்து மரணமடைந்த விவகாரத்தில் இந்திய பொலிசார் 6 பேர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் கடந்த வாரம் நடந்த இச்சம்பவமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆண்டுதோறும் கனடா எல்லை வழியாக அமெரிக்கா செல்ல முயற்சிக்கின்றனர்.
மட்டுமின்றி, கனடாவில் குடியேறும் வாய்ப்புகள் இருந்தும், மக்கள் வேலை மற்றும் வசதி வாய்ப்புகள் தேடி அமெரிக்கா செல்லவே முயற்சிக்கின்றனர்.
இதனிடையே, கனடா எல்லையில் பனியில் உறைந்து மரணமடைந்த நபர்கள் தொடர்பில் குஜராத் பொலிசார் உறுதி செய்துள்ளதாகவும், அவர்கள் ஒரே குடும்பத்தினர் என அடையாளம் கண்டுள்ளதாகவும் கனேடிய நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, குறித்த குடும்பத்தினரையும் மற்று பலரையும் சட்டவிரோதமாக வெளிநாடு அனுப்பி வைத்த கும்பலை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குஜராத் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாக கூறப்படும் 6 பேர்களை கைது செய்துள்ளதாக குஜராத் பொலிசார் தெரிவித்ததாக கனேடிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விவகாரத்தில் அமெரிக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் கனடா எல்லையில் மரணமடைந்த நால்வர் குடும்பத்துடன், அன்றைய நாள் எல்லையை கடக்க முயன்றவர்கள் ஒரே கிராமத்தை சேர்ந்த நான்கு குடும்பத்து உறுப்பினர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
18 பேர்கள் கொண்ட அந்த குழுவில் குழந்தை உடபட நால்வர் பனியில் உறைந்து மரணமடைந்துள்ள நிலையில், எஞ்சியவர்கள் நிலை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.