படிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இந்திய மாணவர்களில் 408 இந்திய மாணவர்கள் கடந்த 2018-ல் இருந்து மரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை இந்திய மத்திய மந்திரி வி. முரளீதரன் மக்களவையில் வெளிப்படுத்தி இருந்தார். இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர்.
கனடாவில் 91 மாணவர்கள் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியபோதுதான், இந்திய மாணவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் வெளிநாடுகளில் படித்து வருகிறார்களா என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் படித்து வரும் மாணவர்களில் எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவலை மத்திய மந்திரி வி. முரளீதரன் மக்களவையில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வெளிநாட்டிற்கு படிப்புக்காக சென்றவர்களில் “408 இந்திய மாணவர்கள் கடந்த 2018-ல் இருந்து மரணம் அடைந்துள்ளனர். கனடாவில் அதிகபட்சமாக 91 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் 48 பேரும், ரஷியாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், ஆஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரைனில் 21 பேரும், ஜெர்மனியில் 20 பேரும், சைபிரஸில் 14 பேரும், இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மத்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று எனவும் இந்திய மத்திய மந்திரி முரளீதரன் வலியுறுத்தினார்.