கனடாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் இவ்வாண்டில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தன. இந்த பிரச்சினைகள் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விடயத்தையும் முன்னிறுத்தியிருந்தது.
மேலும், குறித்த துறையை ஒழுங்குபடுத்துவதில் பிரச்சினை, பணி நீக்கங்கள், குழாய் இடையூறுகள் மற்றும் கட்டாய உற்பத்தித் தடைகள் வரை பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.
இந்நிலையில் இந்த சிக்கல்கள் எதிர்வரும் ஆண்டிலும் தொடரும் எனவும் காலநிலை மாற்றம் குறித்த பரந்த விவாதங்களுக்கு மத்தியில் அதன் சுற்றுச்சூழல் செயற்திறன் தொடர்பாகவும் ஆராயப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதனால், அடுத்த ஆண்டில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் பெரும் அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதனிடையே, இவ்வாண்டின் இறுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்ட நிலையில் துறைசார் தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை, அணு மற்றும் புதுப்பிக்கத்தக்கவைகளில் ஏற்படுத்த வேண்டிய மேம்படுத்தல்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 பில்லியன் டொலர் திட்டத்தின் ஒரு பகுதியாக முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி நிலையத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கனவே சுமார் 1,000 தொழிலாளர்கள் உள்ளனர். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் 7,500 பேருக்கு இடமளிக்கும் வகையில் பிரமாண்டமான பணி முகாம் அமைப்பது தொடர்பாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சூழலுக்கு ஏற்றவகையில் எல்.என்.ஜி. கனடா தளம் 400 ஹெக்ரேயர் பரப்பளவில் உள்ளது. இது 550 காற்பந்து மைதானங்களின் அளவாகும் என்பதுடன் நிறைவு செய்ய இன்னும் பல ஆண்டுகள் செல்லும். எனினும் இந்த திட்டம் இயற்கை எரிவாயு துறைக்கு நம்பிக்கையை வழங்குகிறது.
அத்துடன், எட்மன்டனில் இருந்து வான்கூவர் பகுதி வரை டிரான்ஸ் மவுன்ரன் விரிவாக்க எண்ணெய்க் குழாய் வழியாக கட்டுமானப் பணிகள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.