கனேடியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே கனடா – அமெரிக்கா எல்லைகளை திறப்பது திறப்பது குறித்துத் தீா்மானிக்கப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளின் செயல் திறன், தொற்று நோய் வீதம் ஆகியவை குறித்து ஆராய்ந்து, சுகாதார நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே எல்லைகளை மீளத் திறப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அமெரிக்கர்களுக்கு அதிகளவான தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கூட அங்கு தினமும் 50 ஆயிரம் வரையான தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் ட்ரூடோ சுட்டிக்காட்டினார்.
கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடன் இணைந்து இந்தக் கோடை காலத்தில் எல்லைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நியூயோர்க்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்கா காங்கிரஸ் எம்.பிக்கள் சிலர் கடிதம் எழுதியுள்ளமை குறித்துக் கருத்து வெளியிடும்போதே ட்ரூடோ இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்கா – கனடா இடையிலான தற்போதைய எல்லைக் கட்டுப்பாடுகளால் எல்லைகளில் உள்ள இரு நாட்டவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா காங்கிரஸின் வடக்கு எல்லைகளை பிரதிநிதித்துவம் செய்யும் ஹிக்கின்ஸ் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளார். எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளுடன் எல்லைகளை திறக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் ஹிக்கின்ஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே கனேடியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே எல்லைகளை மீளத் திறப்பது குறித்துத் தீர்மானிக்கப்படும் என கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கோவிட்19 தொற்று நோயை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.