Reading Time: < 1 minute

கனடாவில் உலுக்கிய இரட்டைக் கொலை வழக்கில் சந்தேகநபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் முன்னாள் மனைவியை கொடூரமாக கொலை செய்ததுடன், தப்பித்துச் செல்லும் நோக்கில் மூதாட்டி ஒருவரையும் கொலை செய்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி 41 வயதான Veronique Barbe என்பவரின் சடலம் அவரது குடும்ப இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டது.

அவரது உடலில் மொத்தம் 17 கத்திக் குத்து காயங்கள் காணப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய நபர் என சந்தேகிக்கப்பட்ட Ugo Fredette தலைமறைவானார்.

சம்பவத்தின் போது அந்த குடியிருப்பில் இருந்த 6 வயது குழந்தை ஒருவரையும் Ugo Fredette தூக்கிச் சென்றுள்ளார்.

சம்பவத்தன்று தமக்கும் தமது முன்னாள் மனைவி Veronique Barbe என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்,

ஒருகட்டத்தில் படிக்கட்டில் இருந்து அவர் தம்மை கீழே தள்ளிவிட்டதாகவும், விசாரணையின்போது Ugo Fredette தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஒரு கத்தியுடன் தம்மை மிரட்டியதாகவும், தாம் அவரது தாக்குதலில் இருந்து தப்பி வந்ததாகவும் Ugo Fredette நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலையில் கண்விழித்து பார்த்தால் ரத்த வெள்ளத்தில் Veronique Barbe கிடப்பதாகவும், அவரது மார்பில் குத்தப்பட்ட நிலையில் கத்தி ஒன்று இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த காட்சி தம்மை உலுக்கியதாகவும், அவரை தாம் மிகவும் விரும்பியதாகவும் Ugo Fredette நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் Veronique Barbe கொலைக்கு பிறகு, தப்பிக்கும் நோக்கில் 71 வயதான Yvon Lacasse என்பவரை கொலை செய்து, அவரது வாகனத்தை திருடிச் சென்றுள்ளது விசாரணையில் அம்பலமானது.

இந்த இரட்டைக் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், Ugo Fredette-வுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள நீதிமன்றம், 25 ஆண்டுகளுக்கு பிணை வழங்குவதையும் தடை செய்துள்ளது.