Reading Time: < 1 minute

வருடக்கணக்காக கனடா மற்றும் பிரித்தானியாவுக்கிடையில் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில், பிரித்தானிய தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திவந்தவர்கள், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இருந்து, நேற்று, அதாவது, வியாழனன்று விலகினார்கள்.

இருதரப்புக்கும் இடையே, கனேடிய சீஸ் (cheese) சந்தையில், பிரித்தானிய சீஸ் உற்பத்தியாளர்கள் எவ்வளவு தீர்வையில்லாத (Tariff free) அணுகலைப் பெறவேண்டும் என்பது ஒரு முக்கிய விடயமாக உள்ளது.

பிரெக்சிட்டிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் ஒன்று, மூன்று ஆண்டுகளுக்கு கனேடிய பல்பொருள் அங்காடிகளில் தீர்வையில்லாத பிரித்தானிய சீஸ் விற்கப்பட வழிவகை செய்தது. ஆனால், அந்த அனுமதி, கடந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகிவிட்டது.

பிரித்தானியா முன்பு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருந்ததால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான கனடாவின் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் தாராளமயமாக்கப்பட்ட வர்த்தகத்தை அனுபவித்துவந்தது.

ஆனால், பிரெக்சிட்டுக்குப் பின் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடு அல்ல. ஆகவே, கனடாவின் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு பதிலாக, ஒரு நீண்ட கால இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகள் நடத்திவந்தனர்.

இருதரப்பும் தங்கள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்பதைத்தானே பார்ப்பார்கள். ஆக, பிரித்தானிய மக்களுக்கு நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம் என்று கூறியுள்ள பிரித்தானிய செய்தித்தொடர்பாளர் ஒருவர், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் எந்த நாட்டுடனான பேச்சுவார்த்தைகளையும் இடைநிறுத்தும் உரிமை எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில், இருதரப்பினருக்கும் பயனளிக்கும் வலுவான வர்த்தக உறவை உருவாக்க எதிர்காலத்தில் கனடாவுடன் பேச்சுவார்த்தைகளை மறுதொடக்கம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் Ottawaவில் செய்தியாளர்களிடையே பேசிய கனடா வர்த்தக அமைச்சரான Mary Ng, பிரித்தானியா பேச்சுவார்த்தையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, தனது பிரித்தானிய பிரதிநிதி கெமி படேனோக்கை தொடர்பு கொண்டு, கனடாவின் அதிருப்தியை தான் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என்று கூறிய அவர், நாங்கள் எப்பொழுதும் கனேடியர்களுக்கு நன்மை பயக்கும் சிறந்த ஒப்பந்தத்தையே எதிர்பார்க்கிறோம். அதைத்தான் நாங்கள் எப்போதுமே செய்து வந்தோம். இப்போதும் அப்படித்தான் என்றார்.

உண்மையில், இந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிரச்சினையாக இருப்பது இரு நாடுகளுக்கிடையிலான சீஸ் விற்பனை மட்டுமல்ல. இறைச்சி விற்பனை, தானியங்கி விற்பனை என பல விடயங்கள் உள்ளதால், இரு நாடுகளும் தத்தம் லாபத்தை பார்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.