ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகள ஏற்றுமதி செய்யக்கூடாது என்று விதித்த தடையைத் தளர்த்தி, கனடாவுக்கு மருந்துகளை வழங்கும் அனுமதியை ஒன்றியம் தனது அங்கத்துவநாடுகளுக்கு வழங்கியுள்ளது.
கனடா மட்டும் பிரித்தானியா மட்டுமே தம்மிடம் இம் மருந்துகளைக் கோரியிருந்தன எனவும் இரண்டுக்கும் தடுப்பு மருந்துகளை வழங்கத் தமது நாடுகளுக்கு அனுமதியை வழன்கியுள்ளதாகவும் ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வனுமதியை அடுத்து சம்பந்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடனடியாகவே இம் மருந்துகளை ஏற்றுமதிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தடுப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாலும், புதிய வைரஸ் வடிவங்களின் பரவல் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாலும், ஒன்றிய அங்கத்தவ நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் தமது மக்களுக்கே கொடுக்கப்படவேண்டுமெனத் தீர்மானித்த ஒன்றியம் திடீரென்று தனது அங்கத்துவ நாடுகளுக்கு ஏற்றுமதித் தடைகளை அறிவித்தது. இத் தடை நடவடிக்கையால், முற்கூட்டியே இறக்குமதி ஒப்பந்தத்தைச் செய்து வைத்திருந்த கனடா போன்ற நாடுகள் இறுதி நேரத்தில் மருந்துகளின்றி மிகவும் சிரமத்துக்குள்ளாகியிருந்தன. தற்போது இப் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருக்கிறது. ஏற்றுமதித் தடை முற்றாக அகற்றப்படாவிட்டாலும், கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு அதன் பாதிப்பு மிக் மிகக் குறைவாகவே இருக்குமென ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து தேவையான அளவு தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்திறங்கத் தொடங்கி விட்டன என கனடாவின் கொள்வனவு அமைச்சர் அனிற்றா ஆனந் கூறியுள்ளார்.
இவ்வேற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்தாலும் நோர்வே, ஐஸ்லாந்து, இஸ்ரேல், மற்றும் கோவாக்ஸ் குழுமத்தில் அங்கம் வகிக்கும் பல வறிய நாடுகள் உள்ளிட்ட 92 நாடுகள் இத் தடைப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற 100 பணக்கார நாடுகள் இப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன. இப்போது கனடா இத் தடைப்பட்டியலிலிருந்து நீக்கப்படாவிட்டாலும், ‘மிகக் குறைந்த கட்டுப்பாடுகளுடன்’ மருந்துகளை வழங்க ஒன்றியம் அனுமதி கொடுத்துள்ளதாக ஒன்றியத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.