Reading Time: < 1 minute

கனடாவில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வழங்கும் வகையில் தனது நிலைப்பாட்டை நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு (NACI) மாற்றும் என அரச தரப்பில் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் தொடர்பான விவரங்களை நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இன்று செவ்வாய்கிழமை அறிவிக்கவுள்ளது.

கனடாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்குப் பதிலாக பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இந்த மாத ஆரம்பத்தில் பரிந்துரைத்தது,

எனினும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடுவதால் எந்தப் பாதிப்பும் இல்லை என ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ள பல நாடுகளில் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட வயதானோருக்கு எந்தப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் ஹெல்த் கனடா சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரத்தம் உறைதல் சிக்கல் ஏற்படுவதாக வெளியான தகவல்களை அடுத்து பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த தடுப்பூசி பாவனையை நிறுத்திவைத்துள்ளன.

இவ்வாறு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை இடைநிறுத்திய நாடுகளில் பட்டியலில் நேற்று திங்கட்கிழமை முதல் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவையும் இணைந்தன.

எனினும் இரத்தம் உறைவது தொடர்பான சிக்கல்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியே காரணம் என்பதை நிரூபிக்கக்கூடிய எந்தவித ஆதாரங்களும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

ஐரோப்பாவிலும் பிரித்தானியாவிலும் தடுப்பூசி பெற்ற 17 மில்லியன் மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இரத்த உறைவு ஆபத்து அதிகரித்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நிறுவனம் கூறியுள்ளது.

இதேவேளை, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது என்ற உத்தரவாதத்தை வழங்குவதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று தெரிவித்தார்.

ஹெல்த் கனடாவும் எங்கள் சுகாதார நிபுணர்களும் விஞ்ஞானிகளும் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது, பயனுள்ளது என்பதை உறுதிசெய்ய ஏராளமான நேரத்தை செலவிட்டனர் என மொன்றியலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் தெரிவித்தார்.

பாதுகாப்பானது என உறுதி செய்யப்படும் தடுப்பூசிகள் மட்டுமே கனேடியா்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து சந்தேகம் கொள்ளத் தேவையில்லை எனவும் ட்ரூடோ கூறினார். இதேவேளை, 18 முதல் 64 வயதுடையவர்களிடையே அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி 62.1 வீதம் பாதுகாப்பான செயல் திறனை வெளிப்படுத்தியுள்ளதாக ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.

மொத்தம் 23.9 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள கனடா திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.