Reading Time: < 1 minute

கனடாவில் 05 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கான தடுப்பூசியை அங்கீரிப்பது குறித்த முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.

இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் கிறிஸ்துமஸ், புதுவருட பண்டிகைக் காலத்தில் சிறுவர்கள் தொற்று நோயில் இருந்து ஓரளவு பாதுகாப்புப் பெற முடியும் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்காவில் 5 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி போட கடந்த வாரம் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கனடாவில் சிறுவர்களுக்கு தடுப்பூசியை போட அங்கீகரிப்பது குறித்து தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது என கனடா தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர். சுப்ரியா சர்மா நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கனடாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்படாத நிலையில் இந்த வயதினர் மத்தியில் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருவதாக கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் தெரசா டாம் கூறியுள்ளார்.

எனினும் சிறுவர்கள் மத்தியில் தொற்று பாதிப்பு லேசானதாகக் காட்டப்படுகிறது. மிக அரிதாகவே சிறுவர்கள் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ள நேர்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கனடாவில் புதிய கொரோனா தொற்று நோயாளர் தொக 11 வீதம் அதிகரித்துள்ளது. தற்போது தினசரி சராசரியாக 2,500 புதிய தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் டாம் குறிப்பிட்டார்.

தற்போது தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 1,800 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 528 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர். அத்துடன் தினசரி சராசரியாக 22 கொரோனா மரணங்களும் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில் கனடாவில் 28 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அல்லது 12 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள மக்களில் 85 வீதம் பேர் இப்போது முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசியைப் போட ஹெல்த் கனடா ஒப்புதல் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.