கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பரவியுள்ள நிலையில் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கானோர் மரணித்து வருகின்றனர்.
உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுவரும் நிலையில் கனடாவிலும் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில், இதுவரை 24 இலட்சத்து 82 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு இலட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 326 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆயிரத்து 963ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்று மட்டும் 18 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 8 ஆயிரத்து 454ஆக அதிகரித்துள்ளன.
மேலும், 64 ஆயிரத்து 704 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளதுடன் கனடாவில் தற்போது வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
கனடாவின் கியூபெக் மாகாணமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 54 ஆயிரத்து 884 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, ஒன்ராறியோ மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு 33 ஆயிரத்து 853 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.
இதையடுத்து, அல்பேர்டா மாநிலத்தில் 7 ஆயிரத்து 781 பேர் வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.