கனடாவில் ஹலோவின் கொண்டாட்டங்களின் போது சிறுவர்களால் சேகரிக்கப்பட்ட இனிப்புப் பண்டங்களில், கூர்மையான பிளேடுகள் மற்றும் இரும்பு ஆணிகள் போன்ற ஆபத்தான பொருட்கள் கண்டெடுக்கப்படும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகின்றன.
அண்மைய நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், பெர்ரி நகரிலும் அவ்வாறானதொரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெர்ரி நகரின் ‘வெஸஞ்சர் பார்க்’ பகுதியில் ஹலோவின் இரவன்று சிறுவர்கள் சிலர் ‘டிரிக்-ஒர்-டிரீட்’ முறையில் இனிப்புகளைச் சேகரித்துச் சென்றுள்ளனர்.
சில நாட்களின் பின்னர், சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த ‘ஸ்மார்ட்டீஸ்’ இனிப்புப் பெட்டியைத் திறக்க முயன்ற போது, அதில் ‘நெயில் குளு’ வாடை வீசுவதை அவதானித்துள்ளார்.
சிரமப்பட்டு அந்தப் பெட்டியைத் திறந்த போது, அதற்குள் சிறிய பிளேட் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக அச்சிறுவனுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. தகவலறிந்த பொலிஸார், குறித்த பிளேட்டை மீட்டு தடயவியல் பகுப்பாய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த ஆபத்தான இனிப்புப் பண்டம் எந்த வீட்டில் இருந்து வழங்கப்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. அதேநேரம், அப்பகுதியில் வேறு எந்தவொரு ஒத்த சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.