ஹாமில்டன் பொலிஸார் கடந்த வியாழக்கிழமை இரண்டு இடங்களில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 8 பேர் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையில் மூன்று துப்பாக்கிகள், பாரியளவு போதைப்பொருள்கள், திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் போலி நாணயத்தாள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாமில்டன் போதைப்பொருள் மற்றும் கும்பல் தடுப்பு பிரிவு மற்றும் சில காவல்துறைப் பிரிவுகள் கூட்டாக இணைந்து இந்த தேடுதல் வேட்டையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சேல்பி அவென்யூ (Shelby Avenue) மற்றும் ஜேம்ஸ் ஸ்டிரீட் நார்த் (James Street North) ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு தயார் நிலையில் தோட்டாக்கள் ஏற்றப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகள், 500 கிராம் ஃபென்டனைல், 648 கிராம் மெத்தாம்பெட்டமைன், 120 கிராம் கோகெயின், 70 மயக்க மருந்து மாத்திரைகள், திருடப்பட்ட 2 வாகனங்கள் மற்றும் 1600 டொலர் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மைக்கேல் கேசி (40 வயது), பிராட்லி மார்க் (43 வயது), ஷானன் பேட்சுலர் (39 வயது), ஜூலியன் ஜெசோ (28 வயது), பிராண்டன் ஃப்ரோய்ஸ் (28 வயது), ஜெம்மா ரொஜர்ஸ் (21 வயது), மையா பார்டி (24 வயது) மற்றும் ஜேக்கப் பொய்ட் (23 வயது) ஆகிய 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.