இந்தியப் பிரதமர் மோடி மற்றும் கனடாவில் பணியாற்றும் இந்திய துாதரக அதிகாரிகளுக்கும் கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து கனடாவில உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.
இந்திய மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேநேரத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கனடாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர், ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த டிசம்பர், 26-ஆம் திகதி ஒட்டாவாவில் உள்ள இந்திய துாதரகம் மற்றும் வான்கூவரில் உள்ள துணை துாதரகத்தின் அதிகாரிகளுக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து கனேடியப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதன்பின் சமீபத்தில் வான்கூவரில் உள்ள இந்திய துணை துாதரகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் இது குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இதனையடுத்தே ஒட்டாவா மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், கொலை அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவா் அறிவுறுதியுள்ளார்.