கனடாவில், ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் நடமாடும் பெண் ஒருவரின் கணவர் படுகொலை செய்யப்பட்டார். கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவரைக் கொலை செய்தவர் யார் என தெரியவந்தபோது அனைவருக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் கனடாவில் நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving) அனுசரிக்கப்படும் வாரத்தின், வியாழக்கிழமை, தனது கணவரான ஆல்பிரடைக் (Alfred Belyea, 72) காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார் ஆல்பர்ட்டாவிலுள்ள Suffield என்னுமிடத்தில் வாழும் டெபோரா (Deborah Belyea, 70) என்னும் பெண்மணி.
தம்பதியருக்கு மூன்று மகள்கள். தந்தை இறந்ததால் தனியாக இருக்கும் தாயுடன் இருப்பதற்காக பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருக்கும் மகள்கள் ஆல்பர்ட்டாவுக்கு பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்கள்.
டெபோரா உணர்ச்சிவசப்பட்டு அழுதுகொண்டே இருந்திருக்கிறார். அவருக்கு ஆறுதல் கூறி அவருடனேயே இருந்த மகள்களில் ஒருவரான ட்ரினா (Trina), இரவில் கண் விழித்தபோது, தன் தாய் எதையோ எழுதிக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார்.
தாய் தூங்கியதும் அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த ட்ரினா அதிர்ச்சியடைந்துள்ளார். அதில், தனக்கும் தன் கணவருக்கும் இடையில் உள்ள பிரச்சினைகள், மற்றும் சில விடயங்களை தெரிவித்திருந்த டெபோரா, தன்னை மன்னிக்குமாறு மகள்களைக் கேட்டுக்கொண்டு, வரைபடம் ஒன்றையும் வரைந்துவத்திருந்திருக்க, உடனடியாக பொலிசாரை அழைத்துள்ளார் ட்ரினா.
டெபோரா வரைந்த வரைபடத்தைப் பின்பற்றி Piapot என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார்கள் பொலிசார். அங்கு குப்பை போடும் கவர் ஒன்றிற்குள் மனித உடல் ஒன்று கிடைக்க, அது ஆல்பிரடுடையது என தெரியவந்துள்ளது.
ஆனால், ஆல்பிரடின் உடலில் கைகள் இல்லை. வெட்டப்பட்ட அந்த கைகள் கடைசிவரை கிடைக்கவேயில்லை.
இந்நிலையில், டெபோராவின் காரில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தத்தில் ஆல்பிரடின் DNA கண்டுபிடிக்கப்பட்டதுடன், உடற்கூறு ஆய்வில் ஆல்பிரடுக்கு பல மயக்கமருந்துகள் கொடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் நடமாடும் டெபோரா, எப்படி கணவரைக் கொன்று, அவரது கைகளை வெட்டி, 150 கிலோமீற்றர் தொலைவில் அவரது உடலைக் கொண்டு போட்டிருக்கமுடியும் என அவர் தரப்பு சட்டத்தரணி வாதம் முன்வைத்துள்ளார்.
என்றாலும், ஆதாரங்கள், சூழ்நிலைகளின் அடிப்படையில் டெபோராதான் தன் கணவரைக் கொலை செய்திருக்கமுடியும் என அரசு தரப்பு சட்டத்தரணி வாதம் முன்வைத்துள்ள நிலையில், இந்த வழக்கில் இம்மாதம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.