Reading Time: < 1 minute

கனடாவின் கல்கரி நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ப்ரூஸ் க்ளிஃப் பகுதியில் திங்கள்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வாகனத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

Tamil Business Directory

இந்தத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இருமுறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார். தாக்குதலை நடத்திய நபர் உடனடியாக எட்வர்தி பூங்காவை நோக்கித் தப்பிச் சென்றார்.

தப்பியோடிய நபரைக் கண்டுபிடிக்க எச்.ஏ.டபிள்யூ.சி.எஸ் ஹெலிகொப்டர் உதவியுடன் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தப்பிச் செல்லும் வழியில் அந்த நபர் பொலிஸாரையும் அருகிலிருந்த பொதுமக்களையும் நோக்கித் தொடர்ச்சியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வாகனம் ஒன்றை மிரட்டிப் பறித்து பூங்காவின் வழியே ஓட்டிச் சென்றுள்ளார்.

பின்னர் அந்த வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது. பொலிஸார் அவரை நெருங்குவதற்குள், அவர் பூங்காவிற்கு அருகில் உள்ள ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் தனக்குத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் காயமடைந்தாரா என்பது குறித்து ‘அல்பெர்ட்டா தீவிர சம்பவங்கள் விசாரணை குழு’ விசாரணை நடத்தி வருகிறது.

காயமடைந்த பொலிஸ் அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் உள்ளதாக பொலிஸ் தலைமை அதிகாரி கேட்டி மெக்லெலன் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது அப்பகுதியில் “ஆபத்தான நபர்” தொடர்பிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.