Reading Time: < 1 minute

கனடா முழுவதிலும் உள்ள தேனீக்கள் ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து இறந்து வருவதால், யோர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த பிரச்சினைக்கான தீர்வு பூச்சிகளின் டி.என்.ஏ.வில் மறைந்திருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

வரும் ஒக்டோபரில், தேனீ வளர்ப்பவர்களுக்கு நோய்வாய்ப்பட்ட தேனீக்களைக் கண்டறிய உதவும் வகையில் ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை யோர்க் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கவுள்ளது.

கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத் தொழில்களை பேரழிவிற்கு உட்படுத்தக்கூடிய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடுவதே இதன் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “எங்களுக்கு தேனீக்கள் தொடர்பான சுகாதார நெருக்கடி உள்ளது. அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தெரியவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறோம்” என்று யோர்க் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும், திட்டத்தின் இணைத் தலைவருமான அம்ரோ சயீத் கூறியுள்ளார்.

கனடாவில் தேனீக்கள் ஒவ்வொரு ஆண்டும் 5.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள பயிர்களை மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. அவை பழங்கள் மற்றும் காய்கறிகள் முதல் கனோலா விதைகள் வரை சேர்க்கை செய்கின்றன. அத்துடன் தேனீ வளர்ப்பாளர்கள் ஆண்டுதோறும் 90 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான தேனை உற்பத்தி செய்கிறார்கள்.

ஒவ்வொரு குளிர் காலத்திலும் சுமார் 25 சதவிகிதம் தேனீக்கள் இறக்கின்றன. இது வல்லுநர்கள் நிலையானதாகக் கருதும் விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

இவ்வாறு கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 இல் 1 தேனீ இறந்து வருவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ள நிலையில் தேனீக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் யோர்க் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.