Reading Time: < 1 minute

கனடாவில் இந்திய இளம்பெண் ஒருவர் பேக்கரி ஓவனுக்குள் உயிரிழந்த விடயம் தொடர்பில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள் அவரது சகப்பணியாளர்கள்.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த குர்சிம்ரன் கௌர் (Gursimran Kaur, 19) என்னும் இளம்பெண்ணும் அவரது தாயும், Halifaxஇல் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் பணி செய்துவந்துள்ளார்கள்.

அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, மகளைக் காணாமல் தேடிய அவரது தாய், குர்சிம்ரனுக்கு போன் செய்ய, அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது.

அப்படி தன் மகள் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்யமாட்டார் என்பதை அறிந்த அவரது தாய் மகளைத் தேடி அலைய, குர்சிம்ரன், ஆள் நடக்கும் அளவிலான ஓவன் ஒன்றிற்குள் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அந்த ஓவன் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள், குர்சிம்ரனைப்போலவே வால்மார்ட் பேக்கரியில் வேலை செய்யும் பெண்கள் சிலர்.

அதாவது, அந்த ஓவனை உள்ளிருந்து மூட முடியாது என்றும், வெளியே இருந்து யாராவது பலமாகத் தள்ளிப் பூட்டினால் மட்டுமே அதன் கதவைப் பூட்டுவது சாத்தியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவர்களில் ஒருவரான மேரி என்னும் பெண், அந்த ஓவன் கதவு தானாக மூடவே மூடாது என்பதை செய்முறையாகவே விளக்கியுள்ளார்.

அதிக அளவில் பலத்தைப் பிரயோகித்துதான் அந்த ஓவனின் கதவை மூட முடியும், தாழ்ப்பாள் போட முடியும் என்கிறார் மேரி.

குர்சிம்ரனை யாரோ கொன்றுவிட்டார்கள் என நான் கூறவில்லை. ஆனால், வால்மார்ட் ஓவன் மிகவும் பாதுகாப்பானது என்பது எனக்குத் தெரியும் என்பதால், அந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்பது மீண்டும் மீண்டும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது என்கிறார்.

இதற்கிடையில், அந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர்கள் இதுவரை எந்த விவரத்தையும் வெளியிடவில்லை!

Comments are closed, but trackbacks and pingbacks are open.