Reading Time: < 1 minute

கனடாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டுவிட்ட ரசாயனங்கள் சில, குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் உட்பட, அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

ரொரன்றோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனங்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் முதல், அன்றாடம் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்கள் வரை பல பொருட்களில் இருப்பது தெரியவந்துள்ளது.

Chlorinated paraffins என்று அழைக்கப்படும் ரசாயனங்கள், குழந்தைகளின் பொம்மைகள், கைகழுவ பயன்படுத்தும் சோப் மற்றும் ஹெட்போன்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும், இந்த ரசாயனங்கள், கைக்குழந்தைகள் விளையாடும் பொம்மைகளில், குறிப்பாக குழந்தைகள் வாயில் வைத்துக்கொள்ளும் பொம்மைகளில் (teething toys) அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வை தலைமையேற்று நடத்தும் Steven Kutarna தெரிவிக்கிறார்.

Chlorinated paraffins என்று அழைக்கப்படும் இந்த ரசாயனங்களை தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும், இறக்குமதி செய்வதற்கும், கனடா 2013ஆம் ஆண்டே தடை விதித்துள்ளது.

இந்த ரசாயனம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதுடன், ஆய்வக விலங்குகளில் புற்றுநோயை உருவாக்குவது தெரியவந்துள்ளதால், அது மனிதர்கள் உடல் நலத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என கனடா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.