கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள சவுதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கொல்ல திட்டமிட்டதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே, சாத் அல் ஜாப்ரி என்பவரை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘என்னை கொள்வதற்காக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கனடாவிற்கு ஒரு கொலை கும்பலை அனுப்பினார்’ என சாத் அல் ஜாப்ரி குற்றம்சாட்டியுள்ளார்.
ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையம் வாயிலாக சந்தேகத்திற்குரிய கும்பல் ஒன்று கனடாவிற்குள் நுழைய முயற்சித்தது என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத் அல் ஜாப்ரியின் குடும்பத்தினர் அனைவரும் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பில் பிளேர், ‘கனடாவில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது, யார் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலும் சட்டபடி புகார் அளிக்கலாம்’ என கூறினார்.
2018ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்த கும்பலை சேர்ந்த நபர்கள்தான் ஜாப்ரியை கொல்ல முயற்சித்ததாக வொஷிங்டனில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய அரசின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான ஜாப்ரி, மூன்று ஆண்டுகளாக தனியார் பாதுகாப்பு படை ஒன்றின் பாதுகாப்புடன் கனடாவின் ரொறன்ரோ நகரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.