கனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக சிறுவர்கள் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம் குறைந்தபட்சம் ஐந்து சிறுவர்கள் சளிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டில் சளிக்காய்ச்சல் பருவ காலம் கனடாவில் தீவிரமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கும் குறைந்த வயதுடைய சிசுக்கள் மத்தியில் சளிக்காய்ச்சல் மரணங்கள் மாகாணத்தில் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலத்தில் சளிக்காய்ச்சல் காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஏற்பட்ட மரணங்களை விடவும் தற்பொழுது அதிக மரணங்கள் பதிவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம்ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று சிறுவர் மரணங்கள் பதிவாகியுள்ளன.
வழமையான சளிக்காய்ச்சல் பருவ காலத்தில் பதிவாகும் சிறுவர் மரணங்களை விடவும் இந்த பருவ காலத்தில் கூடுதல் மரணங்கள் பதிவாகின்றன என வான்கூவார் குடும்ப மருத்துவர் டொக்டர் அன்ன வோலொக் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான குழந்தைகள் மத்தியில் சளிக்காய்ச்சல் மரணங்கள் பதிவாவது குறைவு எனவும், நாட்பட்ட நோய் நிலைமைகளை உடைய சிறார்களே சளிக்காய்ச்சல் நோயினால் மரணிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.