கனடாவில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி மூலமான மோசடிச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், தொலைபேசி வாயிலாக தாம் எந்தவொரு கட்டணத்தையும் கோருவதில்லை என்றும், எனவே இத்தகைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாடுகளைச்சேர்ந்த மாணவர்கள் பலர் கனடாவில் உயர்கல்வி பயில்கின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்டவாறான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கும் கனேடிய அரசாங்கம், இவ்வாறான மோசடிகள் இடம்பெறும் முறைகள் மற்றும் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் விரிவாக விளக்கமளித்துள்ளது.
குறிப்பாக கனடாவுக்கான வீசா அல்லது கனடாவில் வேலைவாய்ப்பு குறித்த உத்தரவாதத்தை எந்தவொரு நபராலும் வழங்கமுடியாது என்றும், கனேடியத்தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களில் பணியாற்றும் குடிவரவு அதிகாரிகளால் மாத்திரமே வீசா விவகாரம் குறித்துத் தீர்மானிக்கமுடியும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று இச்சேவைகளுக்கான கட்டணங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள கனேடிய அரசாங்கம், தமது ஊழியர்கள் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் பணத்தை வைப்புச்செய்யுமாறு அல்லது தனிப்பட்ட பணப்பரிமாற்ற சேவையின் ஊடாகப் பணத்தை வைப்புச்செய்யுமாறு கோரமாட்டார்கள் என்றும் கனடாவுக்கு குடிபெயர விரும்புவோருக்கு விசேட சலுகைகள் எதனையும் வழங்கமாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.