கனடாவின் பல்வேறு மாகாணங்களில் கக்குவான் இருமல் எனப்படும் தொடர் இருமல் நோய் பரவுகை அதிகரித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலப்பகுதிக்கு முன்னர் நிலவிய அளவை விடவும் தற்பொழுது இந்த நோய் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கியூபிக் மாகாணத்தில் இந்த ஆண்டில் இதுவரையில் 11670 பேருக்கு இந்த நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் வருடாந்தம் சராசரியாக 562 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த ஆண்டில் கக்குவான் இருமல் நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
10 முதல் 14 வயதிலான சிறுவர்களே இந்த நோயினால் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர் என கியூபெக் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒன்றாரியோ, ரொறன்ரோ, நியூ பிரவுன்ஸ்வீக் உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறு கக்குவான் இருமல் நோயின் தாக்கம் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த நோயை தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்த முடியும் என கனடிய பொது சுகாதார அலுவலக அலுவலகர் டாக்டர் திரேசா டெம் தெரிவித்துள்ளார்.
இந்த நோயானது சிறுவர்கள் மத்தியில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு பாரதூரமானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.