கனடாவிலிருந்து பயணப் பொதி ஒன்றிலிருந்து 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை (08) கைப்பற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை கனடாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
புலனாய்வு பிரிவினருக்கு தகவல்
குறித்த விடயம் தொடர்பில் மேல்மாகாண புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளன.
விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், குறித்த போதைப்பொருள் தொகை கனடாவிலிருந்து டுபாய்க்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கடந்த 14 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த UL226 என்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் குறித்து போதைப்பொருள் அடங்கிய பயணப்பொதி கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.